×

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழா இன்று தொடக்கம்: 10 நாட்கள் நடக்கிறது

சுசீந்திரம், டிச.21: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலயன்சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தமிழக அரசு மார்கழி திருவிழாவுக்கான அனுமதியை அளித்தது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (21ம்தேதி) காலை 9.30க்கு, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 30ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற 23ம் தேதி இரவு நடக்கிறது. கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தங்களது தாய், தந்தையரான சிவன், பார்வதியை சந்திப்பதே மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வருகிற 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு சப்தாவர்ணமும் நடக்கிறது. 30ம்தேதி 10ம் திருவிழா அன்று ஆரூத்ரா தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் செய்து வருகிறார்கள்.

மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி
சுசீந்திரம் கோயில் உட்பிரகாரத்தில் நேற்று காலை பாரம்பரியமாக நடைபெறும் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் 16 பிடாகைகள் (ஊர் பிரதிநிதிகள்) கலந்து கொண்டனர். அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் மற்றும் அழைப்பிதழ் வைத்து திருவிழாவை சிறப்பாக நடத்தி தரும்படி இணை ஆணையர்  அன்புமணி அழைப்பு விடுத்தார். இதில் கோயில் மேலாளர் சண்முகம், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னர் காலத்தில் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரத்தை சுற்றி உள்ள மருங்கூர், நல்லூர், கற்காடு, காக்கமூர், சுசீந்திரம், ஆஸ்ரமம் உள்பட 16 கிராமங்களை சேர்ந்த ஊர் பிரதிநிதிகள் மற்றும் ஊர் மக்களை திருவிழாவுக்கு வந்து சிறப்பாக நடத்தி தரும்படி மஞ்சள் வைத்து அழைப்பார்கள். இந்த நிகழ்வு பாரம்பரியமாக இன்னும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திருக்கொடி பவனி நடைபெற்றது. கோட்டார் இடலாக்குடி ருத்திரபதி விநாயகர் கோயிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் மேள தாளம் முழங்க, முத்துக்குடை ஏந்தி கொடி பட்டத்தை  ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Suchindram Thanumalayaswamy Temple Markazhi Festival ,
× RELATED கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு